
தமிழகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள். இதுவரையில் குவாரிகளிலிருந்து கன மீட்டர் அடிப்படையில் கல் எடுத்து வர அரசுக்கு வரி செலுத்தி வந்துள்ளனர்.
ஆனால் தற்போது மெட்ரிக் டன் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும் என்று அரசு புதிதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஜல்லி, எம் சாண்ட் மற்றும் பிற.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது.
இதன் காரணமாக இந்த புதிய வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் அரசுக்கு தினசரி 300 கோடி வரை இழப்பு ஏற்படும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழப்பார்கள். எனவே அரசு இந்த கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மண்டல ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச் சங்க தலைவர் ராஜா அறிவித்துள்ளார்.
மேலும் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக வீடு கட்டுவதற்கு ஜல்லி மற்றும் மணல் போன்றவைகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.