
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு வருகிற 20-ஆம் தேதி திருப்பூர், கோயம்புத்தூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று வருகிற 21ஆம் தேதி திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.