முதல்வர் ஸ்டாலின் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 தொகுதிகளை இழக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது எனவும் இது தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்றும் ‌அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் கூறியதாவது, மத்திய அரசு தொகுதி சீரமைப்பு என்று எப்போதுமே சொன்னதில்லை. முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார். இது பற்றி யாருமே பேசாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஏன் கபட நாடகமாடுகிறார்.

மக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் முதல்வரை கடுமையாக கண்டிக்கிறேன். மும்மொழி கல்விக் கொள்கையை வைத்து மக்களை திசை திருப்பலாம் என்று முதல்வர் முயற்சித்த நிலையில் அது பலிக்காததால் தற்போது தொகுதி சீரமைப்பு என்று மடை மாற்றுகிறார். நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என்று யார் சொன்னார்கள் என்பதை முதல்வர்  சொல்ல வேண்டும். முதலில் யார் அதை சொன்னார்கள் என்பதை ஸ்டாலின் கூறினால் அந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டிப்பாக பாஜகவும் பங்கேற்கும் என்றார். மேலும் பெயிண்ட் டப்பாவை தூக்கிக் கொண்டு செல்லும் திமுகவினர் ஹிந்தி எழுத்துக்கு பதிலாக ஆங்கில எழுத்துக்களை அழிக்கிறார்கள் என்றும் கூறினார்.