
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த வருடம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் நகை பணம் போன்றவைகள் திருடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொலை வழக்கில் குறவர் இனத்தைச் சேர்ந்த சில மக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியும் பணம் தருவதாக கூறியும் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு போலீசார் வற்புறுத்தியதாக செய்திகள் பரவியது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது திருப்பூர் மாவட்ட காவல்துறை பல்லடம் கொலை வழக்கு தொடர்பாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் மட்டும் தான் விசாரணை நடைபெறுகிறது என்றும் தேவை இல்லாத வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக மிரட்டுவதாக வரும் செய்திகளில் உண்மை கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.