
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில் கைதான சிவராமன் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். அதன் பிறகு பள்ளியின் முதல்வர் உட்பட வழக்கில் அடுத்தடுத்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இனி தனியார் பள்ளிகளில் அனுமதி இன்றி என்சிசி முகாம்கள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகிரியை உலுக்கிய பாலியல் வழக்கில் தற்போது மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் கோபு (42) என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்திருந்தும் அதற்கு துணையாக இருந்துள்ளார். சில தனியார் பள்ளிகளில் நடந்த போலி முகாம்களில் அவரும் கலந்து கொண்டுள்ளார். மேலும் போலியான என்சிசி முகாமுக்கு துணை போன காரணத்தினால் தற்போது கோபுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.