
சென்னை அருகே உள்ள மேலக்கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாருடன் (வயது 45) நெருக்கமாக பழகியதாக தெரியவந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த மாணவியுடன் முறையற்ற உறவில் ஈடுபட்ட பேராசிரியர், பின்னர் மாணவியைக் கைவிட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்த உறவினால் மாணவி காப்பமடைந்த நிலையில், அந்தக் கர்ப்பத்தை கலைப்பதற்காக படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமாகியதைத் தொடர்ந்து, தகவலறிந்த தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பேராசிரியர் ராஜேஷ்குமார் மாணவியை ஏமாற்றி, திருமண வாக்குறுதியின் பேரில் ஒத்துழைப்பு இல்லாமல் உறவு வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். இதில் மாணவியின் நிலை மிகவும் மோசமானதாக இருந்ததால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து, பேராசிரியர் ராஜேஷ்குமாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மேலும் கடுமையான சட்டப்பிரிவுகள் இணைக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கல்வி துறையின் பாதுகாப்பு விதிகள் குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.