தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் புழக்கம் என்பது அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் தற்போது கல்லூரி மாணவர்கள் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து போதைப் பொருட்கள் தயாரித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பணக்காரர்களாக வேண்டும் என்ற ஆசையில் மாணவர்கள் சிலர் வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தபெட்டமைன் என்ற போதை பொருட்களை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி கொடுங்கையூர் பகுதியில் வைத்து கல்லூரி மாணவர்கள் 7 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அதன்படி நவீன் (22), பிளமிங் பிரவுன் பிரான்ஸிஸ் (21), பிரவீன் பிரணவ் (21), ஞான பாண்டியன் (22), கிஷோர் (21), அருண்குமார் ‌(22), தனுஷ் (23) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களில் சிலர் பிரபல இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருவதும், ஞான பாண்டியன் என்பவர் பிரபல கல்லூரியில் வேதியியல் பாடம் படிப்பில் முதுகலை படித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதில் பிரவீன் பிரணவ் ‌ வீட்டில் வைத்து தான் போதைப்பொருட்களை தயாரித்துள்ளனர். மேலும் இவர்கள் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.