தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் உள்ளதாக புகார் எழுந்தது. இதனால் அதனை சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர்கள் தலைமையிலான துணைக் குழுக்களை தமிழக அரசு அமைத்தது. பிறகு திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் ஜூன் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய வழிகாட்டி மதிப்பினை ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவுத்துறை முடிவு செய்தது. அதற்காக பத்திரப்பதிவுத்துறையின் இணையதளத்தில் நேற்று இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தது. இன்று முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால் அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.