
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இதற்கான வரைவு பட்டியல் கடந்த 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது முதல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும் திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15 ஆயிரத்து 157 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் தேர்தல் துறையின் இணையதளம் மூலமும் விண்ணப்பங்களை அளித்தாலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் 31 அமைவிடங்களில் உள்ள 68,000 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலையை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.