
நாடு முழுவதும் தற்போது பாஜகவில் புதிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜகவிலும் விரைவில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருக்கிறார். தற்போது தமிழக பாஜக கட்சியின் தலைவராக அண்ணாமலை இருக்கும் நிலையில் அவரை மீண்டும் பதவியில் நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கு அண்ணாமலை காரணம் என்பதால் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் பாஜக அவரை தலைவர் பதவியில் இருந்து தூக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கூட அண்ணாமலை டெல்லி சென்று வந்தது பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜனிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தமிழக பாஜக கட்சிக்கு விரைவில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருக்கிறார் என்றார். ஒருவேளை அண்ணாமலை கூட மீண்டும் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் கூறினார். எங்கள் கட்சிக்கு என்று ஒரு தனி நடைமுறை இருக்கும் நிலையில் யாருக்கு என்ன வேலை கொடுத்தாலும் அதனை நாங்கள் சரிவர செய்து வருகிறோம். மேலும் அண்ணாமலையும் அவருடைய பணிகளை கட்சிக்காக சரிவர செய்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.