
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 1000 ரொக்க பணத்தை சிலர் வேண்டாம் என்று மறுக்கிறார்கள். இதன் காரணமாக ரூபாய் 1000 ரொக்கப் பணத்தை வேண்டாம் என்று அரசுக்கு எப்படி தெரிவிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
இதற்காக உணவு துறை சார்பில் தனியாக இணையதளம் அல்லது செயலியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை தற்போது தமிழக அரசால் ஏற்கப்பட்ட நிலையில் உணவு வழங்கல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசு வேண்டாம் என்று நினைப்பவர்கள் முன்கூட்டியே அந்த தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த தகவலை உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற முகவரியில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணையதளத்திற்குள் பயனாளர் தங்களுடைய செல்போன் நம்பரை பதிவிட்டு உள்ளே சென்ற பிறகு வாங்க விரும்பாத பொருட்கள் குறித்த விவரத்தை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவற்றை ரேஷன் அட்டைதாரர்கள் விரும்பாததாக கருதி கிடங்குகளில் இருந்தே ரேஷன் கடைகளுக்கு அந்த பொருட்களை அனுப்ப மாட்டார்கள். முன்கூட்டியே தெரிவிப்பதன் மூலம் வசதி படைத்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதை தடுக்க முடிவதோடு ஊழியர்கள் செய்யும் முறை கேடுகளையும் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.