தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழையானது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். ஏற்கனவே இன்று மேற்கண்ட நான்கு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பத்தூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உட்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.