மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று கூறிவிட்டது. இதற்கு திமுக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் பாஜக மற்றும் திமுக இடையே கருத்து மோதல் என்பது நிலவிவரும் நிலையில் மொழி பிரச்சனை என்பது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறப்பான முறையில் செயல்படுவதற்கு தமிழ் பொறியாளர்கள் கண்டிப்பாக ஹிந்தி கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசியலை புறக்கணித்துவிட்டு மொழியை கற்றுக் கொள்வோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் இணக்கமாக பணியாற்றுகிறார்கள். எங்களுடைய வணிகத்தின் பெரும் பகுதி டெல்லி குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்து மேற்கொள்ளப்படுவதால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. ஹிந்தியை கற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். நான் கடந்த ஐந்து வருடங்களாக இடைவிடாமல் ஹிந்தியை கற்றுக் கொண்டதால் தற்போது ஹிந்தியில் பேசப்படும் வார்த்தைகளில் 20 சதவீதம் எனக்கு புரியும்.

எனவே தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்களும் கண்டிப்பாக ஹிந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு திமுகவின் செய்தி தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞரான சரவணன் அண்ணாதுரை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், உங்கள் தொழிலுக்கு ஹிந்தி தேவைப்பட்டால் உங்கள் ஊழியர்களுக்கு அதனை கற்றுக் கொடுங்கள். உங்களுடைய வணிகத்திற்கு ஹிந்தி தேவை என்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எதற்காக ஹிந்தி படிக்க வேண்டும். அதற்கு பதிலாக அங்குள்ள மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் பரிந்துரை செய்யலாம். இது அவர்களின் பிரச்சனையை தீர்க்கும். மேலும் இந்த வகை இருப்பவர்களின் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் மற்றவர்களை விட இரு மடங்கு புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்வது தான் இது பரிதாபத்திற்குரியது என்று பதிவிட்டுள்ளார்.