கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவம் மிகுந்த வேதனையை அளிப்பதாக இருக்கிறது. சாராயமானது மர பட்டைகள், பழங்கள் போன்றவைகளை பயன்படுத்தி தயாரிப்பதில்லை. மாறாக இரசாயனங்களை மட்டும் தான் முழுக்க முழுக்க பயன்படுத்தி தயாரிக்கிறார்கள். கள்ளச்சாராயத்தை ஒழிப்பது மற்றும் அதனை அழிப்பதற்கான தீர்வு காண வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம்.

நாங்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களை இழந்து நிற்கதியாக நிற்கும் குடும்பத்தினருக்கு தான் நிவாரணமாக பணம் கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது எதார்த்தத்தில் நிச்சயம் சாத்தியம் கிடையாது. ஆனால் அதற்கு பதில் கள்ளுக்கடைகளுக்கு தனி லைசென்ஸ் கொடுத்து அதனை படிப்படியாக திறந்தால் நிச்சயம் பூரண மது விலக்கை கொண்டு வர முடியும். பீகார் மாநிலத்தில் கள்ளுகடைகளை திறந்ததன் மூலம் பூரண மதுவிலக்கு சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளனர். தற்போது கேரளாவிலும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகத்திலும் இனி இதை செய்தால் கண்டிப்பாக பூரண மதுவிலக்கு சாத்தியமாகும் என்று கூறியுள்ளார்.