தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சியில் மீண்டும் 5 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது.

தமிழகத்தில் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறன் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கள்ளச்சாராயத்துக்கு மதுராந்தகம் மற்றும் மரக்காணம் ஆகிய பகுதிகளில் 23 பேர் உயிரிழந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் கள்ளச்சாரயத்தை  கட்டுப்படுத்த திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராய வியாபாரிகளுடன் திமுக அமைச்சர் மஸ்தான் நெருங்கிய உறவில் இருப்பதாக கடந்த வருடமே செய்தி வெளியான நிலையில் அவர் மீது திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கள்ளச்சாராய  வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்திக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.