
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை ஏற்காததால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்தது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்ததோடு இந்தியாவின் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கைக்கு அடிபணிய மறுக்கும் ஒரே ஒரு காரணத்தினால் மத்திய அரசினால் ஒதுக்கி வைக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஜனநாயக நாட்டில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது என்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் மாநிலங்கள் ஒன்றுக்கொன்று எதிர் கருத்துக்களை தெரிவிப்பது அரசியலமைப்பு மற்றும் நாட்டில் ஒன்றுபட்ட மதிப்புகளுக்கு எதிரானது. தேசிய கல்வி கொள்கை என்பது இந்திய மக்களின் ஞானம் மற்றும் பலதரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இதன் காரணமாக தேசிய கல்விக் கொள்கைக்கு உங்களுடைய எதிர்ப்பு நோக்கத்தில் நான் சில கேள்விகளை எழுப்புகிறேன். தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகளில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா.? தமிழ் உட்பட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா.? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் உருவாவதை எதிர்க்கிறீர்களா.? தேசிய கல்விக் கொள்கையில் உள்ள முழுமையான மற்றும் சமமான கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா.? அந்த கல்விக் கொள்கையில் உள்ள சமத்துவ மற்றும் பாரபட்ச மற்ற தன்மை ஆகிமவற்றை எதிர்க்கிறீர்களா.? என்ற கேள்வி எழுப்பினார். மேலும் அப்படி இல்லாவிட்டில் தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.