உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்‌. அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நடக்கும் இரு மொழிக் கொள்கை குறித்த பிரச்சனை குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, நாட்டில் மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி காசி தமிழ் சங்கத்தை வாரணாசியில் ஏற்படுத்தியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு இந்தியர்களும் தமிழ் மொழியின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். சமஸ்கிருத மொழியை போன்று தமிழும் மிகவும் பழமையான மொழி. தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்து நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். தமிழகத்தில் வாக்குக்காக மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். வாக்கு வங்கி அபாயத்தில் இருக்கும்போது மொழி அரசியல் உருவாகிறது. மொழி மற்றும் பிராந்தியங்களை வைத்து பிரித்தாலும் சூழ்ச்சி நடைபெறுகிறது என்று கூறினார்.

இதற்கு தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இரு மொழி கல்வி கொள்கை மற்றும் தொகுதி மறுவரையரை தொடர்பாக தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. இது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்களின் தலைவர்களின் நேர்காணலை பாருங்கள். இப்போது மாண்புமிகு யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்கு போதிக்க விரும்புகிறாரா.? எங்களை விட்டு விடுங்கள். இது முரண்பாடு அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் மட்டும் தான் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. மேலும் இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என்று பதிவிட்டுள்ளார்.