
சென்னை மாவட்டம் ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுமதி(38). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் பால்ராஜை பிரிந்து வாழ்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் இருக்கின்றனர். சுமதி தினமும் கூலி வேலைக்கு சென்று தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமதியின் மகளுக்கு திருமணம் நடந்தது. அவரது மகன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த 10 மாதங்களாக சுமதி தேனாம்பேட்டையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஹவுஸ் கீப்பிங் பணிக்கு ஆண் பணியாளர்கள் தான் வேண்டும். நீங்கள் வேலையை விட்டு நின்று விடுங்கள் என அந்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இதனால் சுமதி தனது சம்பளத்தை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மார்ச் 7-ஆம் தேதி (நேற்று முன்தினம்) வர சொன்னதாக தெரிகிறது. இதனால் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சுமதி திடீரென தான் கொண்டு சென்ற பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சுமதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நிறுவன மேலாளர் சுமதி வேலை செய்வதை அடிக்கடி குறை கூறியுள்ளார். அவர் குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு ஆண் பணியாளரை ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு நியமிக்க திட்டமிட்டனர். இதனால் மன உளைச்சலில் சுமதி தற்கொலை முடிவு எடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த நிறுவனத்தின் பெண் மனிதவள அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.