இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டிச் சென்றது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா சர்வதேச T20 போட்டிகளிலிருந்து ஓய்வாய் அறிவித்துள்ளார். கேப்டனாக அதிக T20 போட்டிகளில் (50) வெற்றிபெற்ற வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். இவருக்கு அடுத்து பாபர் அசாம் (48, பாகிஸ்தான்). பிரையன் மசாபா (45, உகாண்டா), மோர்கன் (44, இங்கிலாந்து) ஆகியோர் உள்ளனர். மேலும், இரண்டு முறை T20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2007ல் T20 உலகக் கோப்பையை வென்ற அணியிலும் ரோஹித் இடம்பெற்றிருந்தார்.