
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் எழுந்தது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வமும் இருந்து 4 வருட ஆட்சியை முடித்தனர். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் உட்கட்சி பூசல்கள் என்பது வெளிப்படையாகவே வெடித்தது. பல முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் பலர் மாற்றுக் கட்சியில் இணைந்தனர். அதன்பிறகு சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா ஜெயிலுக்கு சென்ற பிறகு பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி பின்னர் சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்கினார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஓ பன்னீர்செல்வமும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக கட்சியில் பிரிந்த தலைவர்கள் மீண்டும் சேர்ந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்று சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூறி வருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விலகியவர்கள் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பே கிடையாது என்கிறார்.
அதேநேரத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை தன் வசம் கொண்டு வர சசிகலா முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அவ்வப்போது தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் அவருடைய ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் தலைமைக்கு தகுதியே என்றென்றும் எங்கள் அதிமுகவின் தலைவியே. திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பலை தலைமை ஏற்க வருக வருக என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.