
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இருக்கும் ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்துள்ள நிலையில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார். இவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் நிலையில் தற்போது கோவா அணிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதாவது கடந்த ரஞ்சிகோப்பை தொடரின் போது சீனியர் வீரர் ஒருவருக்கும் ஜெய்ஸ்வாலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் அவர் மும்பை அணியில் இருந்து விலகுவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அவரிடமே கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, இது எனக்கு மிகவும் ஒரு கடினமான முடிவு.
நான் இன்று இருக்கும் அனைத்து நிலைமைகளுக்கும் மும்பை அணி தான் முக்கிய காரணம். எனக்கு இந்த வாழ்க்கையை பெற்று கொடுத்தது மும்பை தான். நான் எப்போதுமே மும்பை அணியின் நிர்வாகத்திற்கு கடமைப்பட்டுள்ளேன். அதே சமயத்தில் எனக்கு தற்போது கோவா நிர்வாகம் தலைமை பொறுப்பை கொடுத்து அழைக்கிறது.
இந்தியாவுக்காக விளையாடுவது தான் என்னுடைய முதல் இலக்காக இருக்கும் நிலையில் தற்போது நான் நாட்டுக்காக விளையாடதால் கோவா அணிக்காக விளையாடி அவர்களை ஒரு நல்ல நிலைக்கு எடுத்து செல்ல இருக்கிறேன். மேலும் என்னுடைய வழியில் இந்த முக்கியமான வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.