படிக்கும் போதே வேலைக்குச் செல்லும் மாணவர்கள் அவர்களது கஷ்டங்களை நீயா நானா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். பலர் தாங்கள் படும் கஷ்டங்களை கூறும் போது நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது. அப்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சிறுவன் ஒருவன் பழக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில்,  அவர் படும் கஷ்டங்களை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் கேட்டவுடன் எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறாய் என கேட்க, எனது அம்மாவை நான் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை.

அவர்கள் சரியாக தூங்குவதற்கு ஒரு மெத்தை கூட எங்கள் வீட்டில் இல்லை. அதை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் , தனது அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்வது மட்டுமே தனது லட்சியம் என்றும்  தெரிவித்தார். பின் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத், அவரது  தாயிடம் பேசி சிறிது காலம் அவனை படிப்பில் மட்டும் கவனம் செலுத்த விடுங்கள் படித்து முடித்த பிறகு அவன் உங்களுக்காக இதைவிட பெரிய பல காரியங்களை செய்வான் என அறிவுரை கூறி, மூட்டையை தூக்கி எறிந்து விட்டு இனி தூக்க வேண்டியது புத்தகம் தான் என கூறி இருப்பார்.

அது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் இன்று வைரலாக, பலரும் அந்த பையனுக்கு உதவ விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவில்பட்டி பகுதி நிர்வாகிகள் உடனடியாக விரைந்து செயல்பட்டு நிகழ்ச்சி முடிந்த அரை மணி நேரத்திற்கும் முன்பாக சிறுவனின் முகவரியை கண்டறிந்து நேரே அவர் வீட்டிற்கே சென்று சிறுவனை பாராட்டி அவர்கள் வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். அதில் அச்சிறுவன் தான் தாய்க்கு ஆசையாக வாங்க நினைத்த மெத்தையும் அடங்கும். இந்நிலையில் இது  குறித்து  சிறுவனின் தாய் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.