சென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டையில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததால் கடந்த மாதம் 16-ஆம் தேதி தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி சிறுமி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் காய்கறி கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது மதன்குமாரின் மனைவி மாரியம்மாள் தூண்டுதலின் பேரில் மதன்குமாரின் அண்ணன் பாபு பொதுமக்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

என் தம்பி மீது புகார் கொடுக்கிறாயா? இப்போ போய் புகார் கொடு என கூறி கத்தியால் சிறுமியின் முகம், கை, முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.