
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது நாளாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழக வெற்றி கழகம் என்பது அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது.
நம்முடைய ஆட்சி மலரும்போது கண்டிப்பாக ஊழல் இருக்காது. ஊழல்வாதிகளும் இருக்க மாட்டார்கள். மக்களிடம் செல், மக்களுக்காக வாழு, மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று அண்ணா கூறினார். எனவே மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம். நம்முடைய ஆட்சி சிறுவாணி தண்ணீர் போல தூய்மையாக இருக்கும். வாக்கு சாவடிக்கு வரும் மக்களுக்கு உதவ வேண்டியது நம்முடைய கடமை என்று கூறினார்.
மேலும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய் மீண்டும் பொய் சொல்லி யாரையும் ஆட்சிக்கு வர விட மாட்டோம். பழைய கதைகளை பேசி அரசியல் செய்ய விரும்பவில்லை. கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி உறுதி என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.