
தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் யானை சின்னம் இருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகம் இன்னும் முறையாக பதிவு செய்யவில்லை எனவும் பதிவு செய்த பிறகு இது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் கூறியது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்பவர் சென்னை உரிமைகள் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை தமிழக வெற்றிக்கழகம் பயன்படுத்துகிறது.
எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டபோது அவர்கள் முறையாக பதிவு செய்த பின் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறிவிட்டனர். அசாம் தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய சின்னமாக யானை இருக்கிறது என்றார். இதனைக் கேட்ட நீதிபதிகள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.