புதுக்கோட்டையில் வீட்டில் அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராதிகாவுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவரது கணவர் ராஜன் மகாலிங்கம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் ராதிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த அப்பு என்பருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராதிகாவின் இரண்டு மகன்களையும் அப்பு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனை தாங்க முடியாமல் பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகன் கீர்த்திவாசன் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி தனியாக நடந்து சென்றான்.

உடனே அந்த பகுதி மக்கள் சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது தனது தாயின் தற்போதைய கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறிய சிறுவன் உடல் முழுவதும் உள்ள காயங்களை காட்டியுள்ளார். இதனால் அதிர்ந்து போன மக்கள் உடனடியாக சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். சைல்ட் லைன் அமைப்பின் கண்காணிப்பாளர் சிறுவன் கீர்த்தி வாசனை அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் சிறுவன் நிலையை புரிந்து கொண்ட அவர் கீர்த்தி வாசனை குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றார். மேலும் கீர்த்தி வாசனின் பெற்றோர் நேரில் ஆஜராகும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.