பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பஞ்சாப் மாநிலம், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், சிறுவர்கள் ஸைனாப் (11) மற்றும் ஸெனிஷ் (8) தங்கள் தாயை பிரிந்து பாகிஸ்தான் திரும்ப வேண்டிய கடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பிளவுபட்ட மனதுடன், “என் அம்மாவை விட்டுவிட்டு போவது மிகவும் வலி அளிக்கிறது. என் இதயம் உடைந்து போய்விட்டது,” என கண்களில் கண்ணீருடன் ஸைனாப் கூறினாள்.

இந்த இரு சிறுவர்களும் பாகிஸ்தான் குடியுரிமையினை உடையவர்கள். அவர்கள் தங்கள் இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருக்கும் தாயுடன் கடந்த மாதம் டெல்லிக்கு வந்தனர். தங்கள் நானியை சந்திக்க வந்த இந்த குழந்தைகள், ஒரு மாதத்திற்குள் இருநாட்டு உறவுகள் இவ்வளவு மோசமாக மாறும் என கனவிலும் நினைத்திருக்கவில்லை. “நான் என் நானியை சந்திக்க டெல்லிக்கு வந்தேன். ஆனால் இப்போது என் அம்மாவை விட்டுவிட்டு திரும்பி செல்ல வேண்டும், ஏனெனில் அவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார், நாங்கள் பாகிஸ்தான் குடிமக்கள்,” என ஸைனாப் வேதனையுடன் கூறினார்.

பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று ஸைனாப் கூறியபோதும், அவர் தனது மனவேதனையையும் வெளிப்படுத்தினார்:
“எங்களைப் போன்று அப்பாவி மக்களை அரசுகள் தொந்தரவு செய்ய வேண்டாம்,” என்று ஸைனாப் கேட்டுக் கொண்டார். இந்திய அரசு, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானியர்களை உடனடியாக நாடு கடத்த உத்தரவிட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். இதன் பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் இந்தியர்களுக்கான விசாக்களை நிறுத்திவிட்டது.

எல்லை பகுதியில் ஸைனாபின் தம்பி ஸெனிஷும் தனது வருத்தத்தை வெளியிட்டார்: “நான் என் அம்மாஇல்லாமல் இருக்க முடியாது,” என கதறினார். கராச்சியில் இருந்து இந்தியா வந்திருந்த மூன்று குடும்பங்கள் தற்போது சோகமான நிலைமையில் சிக்கியுள்ளன. குழந்தைகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்; ஆனால் அம்மாக்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள் என்பதே இக்குழப்பத்திற்கு காரணம். “என் அம்மாவும் எங்களுடன் பாகிஸ்தான் செல்ல அனுமதிக்க வேண்டும்,” என இன்னொரு சிறுவன் அலியான் கேட்டுக் கொண்டான்.

“கடந்த மாதம் கராச்சியில் இருந்து இந்தியா வந்தோம். இப்போது என் மனைவி நபிலாவை விட்டுவிட்டே பாகிஸ்தான் திரும்ப வேண்டியுள்ளது. பயங்கரவாதிகள் எங்கள் குடும்பத்தை நாசம் செய்துவிட்டனர். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இதேபோல், முகமது இம்ரானும் தனது குடும்பத்தை விட்டுசெல்வதற்கான வேதனையை பகிர்ந்தார்: அவர் “என் மனைவி ஷர்மீன் கடந்த 18 வருடமாக பாகிஸ்தானில் இருந்தார். ஆனால் அவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதால் தற்போது எங்களை விட்டுவிட்டு தங்க வேண்டியுள்ளது.” தங்கள் குழந்தைகளை தாயோடு இணைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, “மோடி அவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும். குழந்தைகள் தாய் இன்றி இருக்க முடியாது,” என்று கண்கலங்கும் குரலில் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.