
திருவள்ளூர் மாவட்டம் பள்ளம் பகுதியில் லதா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா (22) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விவேக் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் குடும்ப தகராறு காரணமாக சௌமியா கணவரை பிரிந்து தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சௌமியாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அவருடைய தாயார் லதா கண்டித்த போதிலும் சௌமியா கேட்கவில்லை.
இதற்கிடையில் சௌமியா வேறு ஊருக்கு செல்வதாக தன் தாயிடம் கூறிவிட்டு அந்த நபருடன் சென்று விட்டார். இதைப் பற்றி தெரிந்து கொண்ட விவேக் நேற்று இரவு மனைவியின் வீட்டிற்கு சென்ற மாமியாருடன் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபத்தில் லதாவை கத்தியால் கழுத்தில் விவேக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த லதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லதா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது தொடர்பாக பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விவேக் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.