
பாஜக கட்சியின் பிரமுகரும், நடிகருமான சரத்குமார் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்லை. கொலை கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்றவைகள் தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டது. திமுக அரசால் தமிழ் மொழி வளர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவும் இல்லை. நாட்டில் 70 கோடி மக்கள் பேசும் ஹிந்தியை தார் ஊற்றினாலும் அழிக்க முடியாது. அதே நேரத்தில் பழமையான தமிழ் மொழியையும் யாராலும் அழிக்க முடியாது. திமுக அரசு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை எதிர்க்கும் நிலையில் தற்போது விஜயும் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை எதிர்க்கிறார்.
தமிழகத்தில் நடந்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்ப பாராளுமன்ற தொகுதி சீரமைப்பு என்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டத்தை ரத்து செய்வதோடு மத்திய அரசு கொடுத்த நிதியை மாநில அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாநில தலைவர் மற்றும் தேசிய தலைமை எடுக்க முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். மேலும் பாஜக கட்சியின் தலைவராக மீண்டும் அண்ணாமலை வந்தால் அவரை முதலமைச்சராக்குவது என்னுடைய கடமையாகும் என்று கூறினார்.