குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா என்ற பகுதியில் ஸ்ரீ நாராயணன் குருகல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் முதல் தளத்தில் 7-ம் வகுப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட்ட நிலையில் முதல் தளத்தில் மாணவர்கள் அனைவரும் இருந்தனர்.‌ அப்போது மதியம் சுமார் 12:30 மணியளவில் திடீரென வகுப்பறையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் பயந்து போன மாணவர்கள் உடனடியாக கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் அங்கு ஓடி வந்து மாணவர்களை மீட்டனர். இந்த பெரும் விபத்தில் இருந்து மாணவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இருப்பினும் இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இடிந்து விழுந்த சுவர் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மீது விழுந்துள்ளது. இந்த சுவர் இடிந்து விழும்போது ஒரு மாணவனும் கீழே விழுந்தான். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.