புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் கணேசன் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெண்ணாக மாறுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின் திருநங்கையாக மாறிய அவர் தன் பெயரை யாழினி என மாற்றிக்கொண்டார். இவர் நாகையைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்ற வாலிபரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் மகிழ்ச்சியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி திடீரென சந்தோஷுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சைப்பலனின்றி அவர் கடந்த 20 ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த யாழினி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதற்கிடையில் தன்னுடைய தந்தைக்கு அவர் செல்போனில் என் காதல் கணவரை பிரிந்து என்னால் வாழ முடியவில்லை என்பதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என  குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் யாழினியின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது யாழினி தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காதல் கணவர் இறந்த தூக்கத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.