
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை விழுந்ததில் பெட்ரோல் பங்க் மற்றும் பல வீடுகள் நொறுங்கியது. அதோடு பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதில் 74 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விளம்பரப் பலகை வைத்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.