சென்னையை அடுத்துள்ள எண்ணூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மதியழகன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்று 40,000 பணம் எடுக்க படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். ஆனால் அவருடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததை கேட்டு மதியழகன் அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு விசாரித்த போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று 32 லட்சம் ரூபாயை வேறொரு வங்கி கணக்குக்கு அனுப்புவதற்கு பதில் மதியழகன் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளதாகவும் அதனால் சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மதியழகன் வங்கி மேலாளரிடம் புகார் அளித்த நிலையில், உத்தரகாண்ட் மாநில சைபர் கிரைம் போலீசார் மதியழகனின் வங்கி கணக்கை முடக்குமாறு தெரிவித்ததால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாகவும் விசாரணை முடிந்ததும் மீண்டும் வங்கி கணக்கு செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளனர்.