
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வரும் நிலையில் திமுக இதே கூட்டணியோடு மீண்டும் களம் காண இருக்கிறது. அதன்பிறகு அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில் அடுத்து வரும் தேர்தலை ஒன்றாக சந்திக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்த கூட்டணியை திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் கடுமையாக சாடியுள்ளார். அதாவது அதிமுகவையும் தமிழ்நாட்டையும் பாஜகவிடம் எடப்பாடி பழனிச்சாமி அடமானம் வைத்து விட்டதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய பாஜக மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரனிடம் இன்று செய்தியாளர்கள் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, மக்களின் விருப்பப்படி தான் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்துள்ளது.
மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தேர்தல் நேரத்தில் தெரியவரும். திமுக தோல்வி பயத்தில் பேசுகிறது. திமுக செய்துள்ள ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும். கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மேலும் முதல்வர் ஸ்டாலின் ஆ. ராசா மற்றும் பொன்முடியை தான் விமர்சிக்கனும் என்று கூறினார்.