தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சமீபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குடிகாரர்களும் ரவுடிகளும் தான் கலந்து கொண்டதாகவும் விஜய் முஸ்லிம்களை அவமானப்படுத்தி விட்டதாகவும் நேற்று அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஷாபுதீன் ரஸ்வி அறிக்கை வெளியிட்டார். அவர் விஜயை முஸ்லிம் விரோதி என்றும், அவருடைய பின்னனி மற்றும் கடந்த காலங்கள் போன்றவை இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவை என்றும் கூறியதோடு இனி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தமிழக முஸ்லிம்கள் விஜய்யை அழைக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார். இதற்கு தற்போது தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் விஎம்எஸ் முஸ்தபா கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, வழக்கமான அரசியல் நிகழ்ச்சிகள் போன்று இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட இப்தார் நோன்பு நிகழ்ச்சி முறையாக நடந்து கொண்டதோடு அந்த நிகழ்ச்சிக்காக அவர் ஒரு நாள் முழுவதும் நோன்பும் இருந்தார். அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு திமுகவின் ஊது குழலாக செயல்படும் சஹாபுதீன் ரஷ்வி விஜய் பற்றி கூறியதற்கு நான் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதன்பிறகு தமிழக முஸ்லிம்களை குடிகாரர்கள் என்று சொல்லி அவருக்கு நான் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் ரஷ்வி இதோடு முஸ்லிம்கள் பற்றியும் விஜய் பற்றியும் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் போராடி வருவதை இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஆதரிப்பதால் இதனை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகத்தான் வட மாநிலத்தில் உள்ள அந்த கைக்கூலியை ஏவி விஜய்யை விமர்சிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் தேர்தல் களத்தில் விஜயை வீழ்த்தாமல் இதுபோன்ற கருப்பு ஆடுகளை ஒப்பந்தம் செய்து  கீழ்தரமாக அரசியல் செய்யும் திமுகவை கடுமையாக கண்டிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.