ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்தொடர்ந்து 17 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை வகித்த நிலையில் அவர் தற்போது அந்த தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 22992 வாக்குகள் பெற்ற நிலையில் நோட்டாவில் 5729 ஓட்டுகள் விழுந்துள்ளது. இந்த தேர்தலில் விசி சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்ட சீதாலட்சுமி உட்பட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில் தேர்தலில் தோல்வி தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி கொடுத்தார். இது பற்றி அவர் கூறியதாவது,இந்த இடைத்தேர்தலில் கூடுதல் வாக்கு வாங்கும் என்ற திமுகவின் நம்பிக்கையை மக்கள் உடைத்துள்ளனர். பெரியாரைப் பற்றி பேசியதால் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் என்பது குறையவில்லை. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் காரணமாக திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. மேலும் இதன் மூலம் 2026 தேர்தலில் அபார வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டதாக தெரிவித்தார்.