
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் திமுகவுக்கு பயம் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் விஜயை பார்த்து திமுக பயப்படுவதாகவும் அதனால் தான் விஜய் கட்சிக்கு அடுத்தடுத்து சிக்கல்களை கொடுத்து அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தமிழக வெற்றிக் கழகத்தால் திராவிட கட்சிகளின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அதாவது இன்று தென்காசியில் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, நீட் தேர்வு ஒழிப்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவது போன்று திராவிட கட்சிகள் பேசுவதையே விஜயும் பேசலாம். ஒருவேளை விஜய் அப்படி பேசினாலும் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. ஆனால் திராவிட கட்சிகளுக்கு வாக்குகள் சிதற வாய்ப்பு உள்ளது. திராவிட கொள்கை உடையவர்களால் பாஜகவின் வளர்ச்சியை ஒருபோதும் தடுக்க முடியாது என்று கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு முன்னதாக எச். ராஜா வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததால் தமிழகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
அதாவது நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தது மிகப்பெரிய ஒரு விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. அதோடு அவருடைய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்த நிலையில் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதாக இருக்கும் நிலையில் அந்த தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு நிச்சயம் விஜய் மிகப் பெரிய சவாலாக இருப்பார் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது தற்போது எச் ராஜாவும் திராவிட கட்சிகளுக்கு விஜயினால் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறியது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.