தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ரவி அவையை புறக்கணித்துவிட்டு சென்றார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் சட்டசபையை புறக்கணித்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. ஆனால் உரையை வாசிக்காமல் ஆளுநர் பாதியில் வெளியேறியதால் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு ஆதரவாக பேசுகிறது. தற்போது தமிழக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சுட்டி காட்டியதற்காக ஆளுநர் மீது திமுக அரசுக்கு பழி போடுவது வாடிக்கையாகிவிட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, திமுக அரசு தங்கள் நிர்வாக தோல்வியை மறைப்பதற்காகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மூடி மறைத்து திசை திருப்புவதற்காகவும் தேவையில்லாமல் ஆளுநர் மீது பழி போடுகிறது. ஆளுநர் தமிழ் தாய் வாழ்த்து பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிலையில் அதனை திமுக அரசு மறுத்துள்ளது. ஆளுநர் முறையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறும் நிலையில் தேவையில்லாமல் திமுக அரசு அதனை சர்ச்சையாக மாற்றி பிரச்சனையை உருவாக்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பொது மக்களின் கவனத்தை திமுக அரசின் நிர்வாக தோல்வியிலிருந்து திசை திருப்ப தேவையில்லாமல் முயற்சிக்க வேண்டாம் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் ஆளுநர் உரை தொடங்கும் முன்பும் நிறைவடையும் போதும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இரண்டுமே இசைக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்ற கூறினார்.