புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளம் அக்ரஹாரம் பகுதியில் சாத்தையா-சத்தியம்மாள் (75) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மருமகன் செல்வம். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இதில் செல்வம் அறந்தாங்கி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அதோடு கவுன்சிலராகவும் இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்துக்கு குளிப்பதற்காக சத்தியம்மாள் சென்றுள்ளார். அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கரையோரமாக சத்தியம்மாள் பிணமாக மிதந்தார். அதோடு அவர் அணிந்திருந்த 8 பவுன்  தங்க நகைகளையும் காணவில்லை.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக நாகுடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சத்தியமாள் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தங்க நகைகளுக்காக சத்தியம்மாள் குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த முகாஸ்ரின் (25) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.