சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி. பாஸ்கரின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் வாரிசு அரசியலை பின்பற்றாமல் ஒரு மாவட்ட தலைவரை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். முன்மொழி கொள்கையில் தாய்மொழிக்கு தான் பிரதான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் திமுக தமிழகத்தில் தமிழ் கற்பதை எதிர்க்கிறார்களா என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி கேட்டார்.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல பள்ளிகளில் முன்மொழி கொள்கைகள் கற்பிக்கப்படும் போது அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மூன்று மொழிகளை படிக்கக்கூடாதா? திமுக குடும்பத்தினர் நடத்தக்கூடிய பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மாறி வரக்கூடிய உலகத்தில் மாணவர்கள் இன்னொரு மொழியை கூடுதலாக கற்றுக் கொண்டால் என்ன பிரச்சனை வரப்போகிறது? நாங்கள் இந்த இடத்தில் இந்தியை திணிக்கவில்லை. மூன்றாவதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகின்றோம். ஆனால் திமுகவினர் தான் இந்தி திணிப்பை மக்கள் மீது திணிக்கின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் காட்டமாக பேசியுள்ளார்.