
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் அது நாளை சென்னை அருகே கரையை கடக்கும் என்பதால் மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று முன்தினம் முதலே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அரசாங்கம் தொடர்ந்து பருவ மழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, சென்னையில மழையால் தண்ணீர் தேங்காத அளவுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் பிறகு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் பால்பாக்கெட் போன்றவைகளை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மழை பெய்யும் மின்சாரம் அருகே செல்ல வேண்டாம் எனவும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலினும் சென்னையில் நேரில் சென்று ஆய்வு செய்யும் மேற்கொண்டார்.
அப்போது திமுக ஐடி விங் சார்பில் மேற்கொள்ளப்படும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு பேசி அவர் இரவு நேரங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் திமுக ஐடி விங் நிர்வாகிகள் யாரும் தூங்காமல் விழித்திருந்து மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் முன்னதாகவே திமுக கட்சி நிர்வாகிகள் அனைவரும் பருவமழையின் போது மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் எந்த நேரமும் களத்திற்கு வர தயாராக இருக்க வேண்டும் எனவும் திமுக தலைமை கழகம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.