விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியினை தொடங்கிய விஜயும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று தெரிவித்தார். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக வெற்றிக்கழகமும் வருகிற சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவனிடம் கூட்டணி தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது, வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி. அதில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து திமுக கூட்டணியில் விசிக நீடித்து வருவதாகவும் கொள்கை கூட்டணியை விட்டுவிட்டு வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் கூறினார். வேண்டுமென்றே சிலர் கூட்டணி குறித்து பொய் செய்திகளை பரப்புகிறார்கள். அதனை தான் முற்றிலும் மறுத்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அடுத்த மாதம் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் ஒரே மேடையில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.