அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை இனி ஊடகங்கள் பயன்படுத்த வேண்டாம். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பல்வேறு அவதாரங்கள் எடுப்பதாக கூறுகின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான். அவர்களை மீண்டும் இணைப்பது தொடர்பாக மூத்த தலைவர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது. அது பச்சை பொய். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு பிரிந்து போனவர்கள் புதிய அவதாரங்கள் எடுப்பதாகவும் தங்கள் தரப்பு மட்டும் தான் உண்மையான அதிமுக என்றும் கூறினார்.

அதன் பிறகு திமுக அரசு வெள்ள நிவாரண நடவடிக்கைகளை சரியான முறையில் எடுக்கவில்லை என்றும் வெள்ளை அறிக்கை கேட்டால் உதயநிதி ஸ்டாலின் முதிர்ச்சி இல்லாமல் பதில் வழங்குகிறார் என்று கூறினார். எதிர்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்டால் அதனை வழங்குவது அரசின் கடமை என்றார். வெறும் மழைக்கே திமுக அரசு அலறுகிறது. ஆனால் அதிமுக பல புயல்களை சந்தித்துள்ளது என்று கூறினார். மேலும் அதிமுக கட்சியில் சசிகலா, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கருத்துகள் பரவி வரும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.