
மயிலாடுதுறை மாவட்டத்தில் தவசிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் (22) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடந்த மாதம் கும்பகோணத்தைச் சேர்ந்த ரஞ்சித் (24) என்பவருடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகும் சிறுமி தன் காதலை மறக்கவில்லை. இதனால் தன் காதலன் உதயகுமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்படி கடந்த 9-ம் தேதி இரவு சிறுமியின் வீட்டிற்கு உதயகுமார் சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளில் சென்று அவர் சிறுமியை அழைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டார். இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரியின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமியின் பெற்றோர் மற்றும் ரஞ்சித்தின் பெற்றோரை வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.