கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி அருகே உள்ள ஒரு பகுதியில் பிரசாந்த் என்ற 29 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை  சேர்ந்த ஐஸ்வர்யா என்ற ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் ஐஸ்வர்யாவின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். அதாவது பொருளாதார ரீதியாக முன்னேறுமாறு அந்த வாலிபருக்கு ஐஸ்வர்யாவின் பெற்றோர் அறிவுரை கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து பிரஷாந்த் மீண்டும் திருமணம் குறித்து பேச ஐஸ்வர்யாவின் சித்தி வீட்டிற்கு சென்றார். அங்கு ஐஸ்வர்யாவும் வந்திருந்த நிலையில் பிரசாந்த் கத்தி மற்றும் விஷம் போன்றவற்றை எடுத்துச் சென்றார்.

இந்நிலையில் பிரசாந்த் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் கேட்ட நிலையில் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறிவிட்டார். இதனால் தன்னிடமிருந்த விஷத்தை கட்டாயப்படுத்தி ஐஸ்வர்யாவை குடிக்க வைக்க முயற்சி செய்தார். அவர் அதனை தட்டி விட்டதால் கோபத்தில் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யா கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த ஐஸ்வர்யா சம்பவ இடத்தில் இறந்த நிலையில் பின்னர் பிரசாந்த்தும் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். அவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்