
டெல்லியில் உள்ள கோண்டாமைண்ட் பகுதியில் 20 வயது வாலிபர் ஒருவர் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடுரோட்டில் வைத்து பலமுறை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணை குத்திய பிறகு அந்த வாலிபர் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தற்போது இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது.
அதாவது கடந்த ஒரு வருடமாக அந்த பெண்ணும் 20 வயது வாலிபரும் காதலித்து வந்த நிலையில் அந்த பெண் திடீரென வாலிபரை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறிவிட்டார். இது அந்த வாலிபருக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் நடுரோட்டில் வைத்து அந்த பெண்ணை கத்தியால் குத்தியதோடு பின்னர் தானும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அந்த வாலிபரை பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தனக்கு தன்னுடைய மகள் வேண்டும் என்றும் வேதனையோடு தெரிவித்துள்ளார்.