திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், கர்ப்பம் காரணமாக பேறுகால விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிமன்ற அதிகாரிகள், அவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகக் கூறி விடுப்பு வழங்க மறுத்தனர். இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது கணவர் 2020-ல் இறந்துவிட்டதாகவும், பின்னர் பாரதி என்பவருடன் குடும்பமாக வாழ்ந்த நிலையில் கர்ப்பமாகியதாகவும், அவர் திருமணத்திற்கு மறுத்ததால் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர், 2024-ல் அந்த நபர் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும், இந்த இடைக்காலத்தில் அவர் சட்டப்படி வாழ்ந்ததாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, “பெண் ஊழியரின் திருமண நிலையை வைத்து அவருடைய பேறுகால விடுப்பை நிராகரிப்பது மனித உரிமை மீறலாகும். சட்டப்படி கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு அந்த நிலையிலேயே உரிய நலன்கள் வழங்கப்பட வேண்டிய கட்டாயம் உண்டு. மேலும், பேறுகால விடுப்புக்கு திருமண சான்றிதழ் கோரப்படும் அவசியமும் இல்லை. எனவே, பெண் ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.