கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல் புரம் பகுதியில் செல்வின் தேவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெமிஷா (23) என்ற மகள் இருக்கிறார். இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் கடந்த 6 வருடங்களாக ஸ்ரீராம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் ஸ்ரீராம் பிஇ முடித்துள்ள நிலையில் பெங்களூரில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த காதல் விஷயம் பெண் வீட்டாரருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிய வந்த நிலையில் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு பெமிஷாவை வீட்டு சிறையில் வைத்து வெளியே விடவில்லை.

இந்நிலையில் பெமிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்த நிலையில் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதில் அவருக்கு உடன்பாடு இல்லாததால் பெற்றோரிடம் ஒப்புக்கொண்டது போல் நடித்துள்ளார். திருமணத்திற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வீட்டின் சுவர் ஏறி குதித்து பெமிஷா தன் காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பெமிஷா தன் பெற்றோரிடம் செல்ல மறுத்துவிட்டார். இருவரும் மேஜர் என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் பதிவு திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.