உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்தப் பெண்ணுக்கு அவருடைய தாயார் தான் வரன் பார்த்துள்ளார். தன்னுடைய தாயார் பார்த்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள பெண் சம்மதித்த நிலையில் வருகிற 16-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில் மணமகனுக்கும் மணமகளின் தாயாருக்கும் இடையே காதல் மலர்ந்தது.  மணமகளை விட அவருடைய தாயார்தான் அழகாக இருந்ததாக கூறப்படும் நிலையில் மணமகனுக்கு அவர் மீது ஆசை வந்தது. அதோடு மாமியாரும் மணமகனை விரும்பினார்.

இந்த விவகாரம் மணமகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தெரிய வராத நிலையில், இருவரும் தங்கள் காதலை வளர்த்ததோடு தன் வருங்கால மாமியாருக்கு மணமகன் ஒரு புதிய செல்போனை பரிசாக வழங்கியுள்ளார். இவர்கள் இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்த நிலையில் தற்போது மாமியாரும் மருமகனும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். திருமணத்திற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை மற்றும் பணம் போன்றவற்றையும் திருடிவிட்டு அவர் சென்று விட்டார்.

இந்நிலையில் மனைவி ஷாப்பிங் சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த கணவர் தன் மகளின் அறையை சோதனை செய்தபோது பணம் மற்றும் நகை மாயமானது தெரியவந்தது. பின்னர் தன்னுடைய மனைவி மற்றும் மணமகனுக்கு அவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது இருவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அப்போதுதான் அவர்களுக்கு விவரம் தெரியவர உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.