ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 27 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்கள் மதத்தைக் கேட்டு குறி வைத்து தாக்குதல் நடத்தியதோடு ஆண்களை மட்டுமே கொலை செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் பலர் தங்கள் உறவுகளை இழந்து தீரா துயரில் இருக்கும் நிலையில், தற்போது மனதை உலுக்கும் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது திருமணம் ஆகி 5 நாட்களாகும் நிலையில் இந்திய கடற்படை அதிகாரி வினய் என்பவர் தன் மனைவியுடன் ஹனிமூன் சென்றுள்ளார். இவருக்கு 26 வயது ஆகும் நிலையில் அவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் தன் கணவனின் சடலத்தின் அருகே அந்த பெண் கலங்கி போய் இருக்கும் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரின் மனதையும் கலங்க வைத்துள்ளது. மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.